கூலி உயர்வு வழங்கக் கோரி, டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லையாம். எனவே, தற்போது, வழங்கும் ஏற்றுக் கூலி ரூ.1.25-ஐ உயர்த்தி ரூ.2.50-ஆக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் முழுத் தொகைக்கும் இபிஎப், இஎஸ்ஐ செலுத்திட வேண்டும். இஎஸ்ஐ செலுத்த கார்டு வழங்க வேண்டும். டாஸ்மாக் கிடங்கில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உணவு அருந்த, உடை மாற்ற ஓய்வு அறை, கழிவறை வசதி செய்துதர வேண்டும். டாஸ்மாக் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.முருகன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் எம்.தண்டபாணி முன்னிலை வகித்தார். சுமைப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன், சிஐடியூ மாவட்டச் செயலர் பி.கருப்பையன், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், மாவட்ட இணைச் செயலர் வி.சுப்புராயன், சிப்காட் பகுதி குழுத் தலைவர் ஆர்.ஆளவந்தார், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் வி.திருமுருகன், கைத்தறி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.தட்சிணாமூர்த்தி, சிப்காட் செயலர் எம்.முத்து, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் டி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.