கூட்டுக் குடிநீர்த் திட்ட வழித்தடத்தில் உயரழுத்த புதைவட மின் கம்பிகள் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் ரட்சகர்நகர் விரிவாக்கம், ஸ்ரீசாந்திநகர், காமாட்சிநகர், அண்ணாமலைநகர், கண்ணையாநகர் உள்ளிட்ட 20 குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனு:
கடலூர் எஸ்.என். சாவடியில் ஓடைக்காரன் தெரு என்றழைக்கப்படும் கெடிலம் சாலையில் உயர் அழுத்த மின்சார வயர்களை புதைவடமாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் மேற்குப் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. அதனருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய்கள், பிஎஸ்என்எல் வயர்களும் புதைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தையொட்டியே தற்போது உயர் அழுத்த மின் வயர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் காலத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய்கள் அல்லது பிஎஸ்என்எல் வயர்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு பழுது நீக்குவதற்காக பள்ளம் தோண்ட வேண்டியிருக்கும். அப்போது எதிர்பாராத வகையில் அருகே செல்லும் உயர் அழுத்த மின்வயர்களில் பட்டால் பெரும் மின் விபத்து நேரிடலாம். மின் இணைப்புகள் துண்டிக்கப்படலாம். இந்த ஆபத்து காரணமாகவே அந்தப் பகுதியினர் புதைவட மின்சார வயரை சாலையில் மேற்குப்புறத்தில் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கிழக்குப்புறத்தில் சாலையை ஆக்கிரமித்து சில வீடுகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தினால் எந்தவிதமான அச்சமுமின்றி மின் புதைவட பாதையை அமைக்கலாம் என அதில் தெரிவித்துள்ளனர்.