கடலூர்

கடலூரில் ரூ.1.20 கோடியில் நடைமேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்

27th Aug 2019 09:17 AM

ADVERTISEMENT

 

கடலூரில் ரூ.1.20 கோடியில் அமைக்கப்பட்ட புதிய நடைமேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை - நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலூர் பாரதி சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் பள்ளி, கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன. எனவே, பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

இதனைக் கருத்தில்கொண்டு புதுநகர் காவல் நிலையத்துக்கும் புனித அன்னாள் பள்ளிக்கும் இடையே மேம்பாலம் அமைக்க வேண்டுமென கடலூர் நகராட்சி சார்பில் அப்போதைய தலைவர் சி.கே.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து வந்த ஆர்.குமரனும் அதனை வலியுறுத்தி வந்தார். 

ADVERTISEMENT

இதையடுத்து, அப்போது கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஆ.அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய நடைமேம்பாலத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கடலூரில் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சார்-ஆட்சியர் (பொ) முத்துமாதவன் தலைமையில், நகராட்சி ஆணையர் ப.அரவிந்த்ஜோதி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.கோவிந்தராஜ், நகராட்சி முன்னாள் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிதம்பரம் கூட்டுறவு வங்கித் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் கே.வீரமணி, நிர்வாகிகள் ஏ.அருள், சுப்பிரமணியன், பாலு உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேம்பால ஒப்பந்ததாரர் எம்.கே.எம்.எஸ்.பஷீருல்லா நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT