கடலூர்

ஊதிய உயர்வு வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மனு

27th Aug 2019 09:18 AM

ADVERTISEMENT

ஊதிய உயர்வு வழங்கக் கோரி "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
"108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் பி.வெங்கடேசன், துணைத் தலைவர் கே.விஜயன், பொருளாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் குமரேசன், கார்த்திகேயன், ராஜேஷ் ஆகியோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனு: 
கடலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் 35 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 160 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், மருத்துவ உதவியாளர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டில் "108' ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.240 கோடி ஒதுக்கிய நிலையில் தற்போது ரூ.270 கோடியாக ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. மேலும், வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு, விழாக்கால தொகை மற்றும் ஊக்கத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. 
ஆனால், "108' நிர்வாகத்தை நடத்தும் தனியார் நிறுவனம் ஊழியர்களுடன் 5 மாதமாக பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் மாநிலத் தலைமை அறிவிக்கும் போராட்டத்தில் பங்கேற்போம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
வீட்டுமனைப் பட்டா கோரி மனு: இதேபோல, பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் விருத்தாசலம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் விஜயாகுணசேகரன், அதிமுக வட்ட செயலர் வீராசாமி ஆகியோர் தலைமையில் சுமார் 200 பேர் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
விருத்தாசலம் நகராட்சி மேட்டுக்காலனி ஏரிக்கரையில் சுமார் 70 ஆண்டுகளாக 400 அருந்ததியினர் குடும்பத்தினர் குறுகிட இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் 250 குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனைப் பட்டா இல்லை. எனவே, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். நகராட்சி எல்லைக்குள் அரசு புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே, அந்த இடத்தில் அருந்ததியினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  மனுவினைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுதொடர்பாக விசாரணை நடத்திட விருத்தாசலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT