கடலூர்

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 07:53 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து, கடலூர் மற்றும் சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ப.சிதம்பரம். இவர், கடந்த 2007- ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ. 305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. 
இந்த நிதியைப் பெறுவதற்காக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர் மீது சி.பி.ஐ. 
குற்றஞ்சாட்டி, கடந்த 2017-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. 
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து, கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் என்.குமார் தலைமை வகித்தார். வட்டத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சீத்தாராமன், நகரத் தலைவர்கள் திலகர், முருகன், சாக்ரடீஸ், குள்ளப்பிள்ளை, நகரச் செயலர் பி.ஜி.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்திராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் வி.முருகன், ரங்கமணி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராகவும், ப.சிதம்பரத்தை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, திட்டக்குடியிலும் காங்கிரஸ் நிர்வாகி அன்பரசு தலைமையில், அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
சிதம்பரம்: சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் பழனி தலைமை வகித்தார்.  மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.பி.கே.சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, கட்டாரி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் சி.முருகேசன் தலைமையி லான போலீஸார், மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT