போலி விதைகளை விற்றால் உரிமம் ரத்து: துணை இயக்குநர் எச்சரிக்கை

சட்டத்துக்குப் புறம்பாக போலி விதைகளை விற்பனை செய்வோரின் விதை விற்பனை உரிமம் நிரந்தரமாக

சட்டத்துக்குப் புறம்பாக போலி விதைகளை விற்பனை செய்வோரின் விதை விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் ஜெ.மல்லிகா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் நெல் (சம்பா), மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றின் விதைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. உரிமம் பெற்ற விற்பனையாளர்கள், உரிமத்தின் மேற்குறிப்பு செய்துள்ள இடங்களில் மட்டுமே விதை இருப்பு வைத்து, விநியோகம் மேற்கொள்ள வேண்டும். விற்பனை உரிமம், விதை இருப்பு, விலை விவர பலகையை  பார்வைக்கு வைக்க வேண்டும். விதை கொள்முதல் பட்டியல், பகுப்பாய்வு முடிவுகள், வெளி மாநில நெல் விதைக்கு படிவம்-2, தனியார் தர பதிவுச் சான்றிதழ், இருப்புப் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.
விதைக் குவியல்களைப் பெற்றவுடன் கடலூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு விதை மாதிரிகளை அனுப்பி, மாதிரி ஒன்றுக்கு ரூ.30 வீதம் ஆய்வுக் கட்டணம் செலுத்தி விதை பரிசோதனை அறிக்கையைப் பெற்று பராமரிக்க வேண்டும். 
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதைக் குவியலுக்கான சான்று அட்டை, ரகம், நிலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை பரிசோதித்த பின்னர், உரிய விற்பனை ரசீதுடன் விதைகளை வாங்க வேண்டும். 
விதையின் தரத்தை உறுதிப்படுத்த விதை ஆய்வுத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல் கிராமங்களில் உள்ளூர் நபர்களோ, வியாபாரிகளோ, வெளியாள்களோ விதைகளை விற்றால் அதை வாங்கி ஏமாற வேண்டாம்.
சட்டத்துக்குப் புறம்பாக விதைகள் விற்கப்படுமாயின், அவை தரமற்ற, முளைப்புத் திறன் குறைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், அவை பருவத்தில் பூக்காமல், கதிர் வராமல் மகசூலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் போலி விதைகள் ஆகும். 
அவ்வாறான விதைக் குவியல்களை விற்றால், அந்த இடத்தின் பொறுப்பு நபர், விற்பனையாளர் மற்றும் நிறுவனங்களின் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத்தரப்படும். மேலும், சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com