சிதம்பரம் கோயில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசர் குளக்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸாரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசர் குளக்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸாரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் கனகசபை நகரில் நடராஜர் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசர் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரைப் பகுதியை ஆக்கிரமித்து பல வீடுகள் கட்டப்பட்டிருந்தன. மேலும், குளமும் தூர்ந்துபோனதால் கடந்த 20 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. 
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கூறிய ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், வீடுகளை யாரும் காலி செய்யவில்லையாம். 
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவின் பேரில், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில், நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 59 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. சமூக ஆர்வலர் மு.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் சி.முருகேசன், கே.அம்பேத்கர், அமுதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றினர். அகற்றப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 
இதேபோல, ஓமக்குளம், நாகச்சேரி குளத்தின் ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com