கடலூர்

பண்ருட்டி அருகே பைக் மீது பேருந்து மோதல்: 2 மாணவர்கள் பலி

16th Aug 2019 09:29 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் காந்தி நகர் புது காலனியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் மகன் சக்தி சிவகண்டன் (16),  பழனி மகன் சந்தோஷ்குமார் (16). இவர்கள் இருவரும் காடாம்புலியூர் சமத்துவபுரத்தில் உள்ள மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இருவரும் சென்னை - கும்பகோணம் சாலையில் வியாழக்கிழமை காலை பைக்கில் சென்றனர். பைக்கை சக்தி சிவகண்டன் ஓட்டினார். சந்தோஷ்குமார் பின்னால் அமர்ந்து சென்றார். காடாம்புலியூரை அடுத்து தனியார் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் சென்ற போது, சென்னையிலிருந்து நெய்வேலி நகரியத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் சக்தி சிவகண்டன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கடலூர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வி.சி.க.வினர் சாலை மறியல்
அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் மாணவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக வட்டாட்சியர் தலைமையில், வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை 9 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என டி.எஸ்.பி. கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தச் சாலை மறியலால்  சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துத் தடைபட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT