கடலூர்

சுதந்திர தின விழா: ரூ. 1.20 கோடியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

16th Aug 2019 09:31 AM

ADVERTISEMENT

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் ரூ. 1.20 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
நாட்டின் 73-ஆவது ஆண்டு சுதந்திர  தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதை முன்னிட்டு, விளையாட்டரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனுக்கு போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்து அழைத்துச் சென்றனர். 
பின்னர், காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் உடன் சென்று தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் எஸ்.பி.யுடன் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார். 
பின்னர், ஆயுதப் படை ஆய்வாளர் எஸ்.விஜயகுமார் தலைமையில் பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், ஜெ.ஆர்.சி. ஆகிய குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத்  தியாகிகளின் வாரிசுகளை அழைத்து பொன்னாடை அணிவித்தும், பரிசுகளை வழங்கியும் கெளரவித்தார். இதையடுத்து, பல்வேறு துறைகள் சார்பில, 104 பேருக்கு ரூ. 1.20 கோடியிலான நலத் திட்ட உதவிகளையும், சிறப்பாகப் பணிபுரிந்த 130 அலுவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, 8 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இதில், சிறப்பான பங்களிப்பு செய்த கடலூர் துறைமுகம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, பி.முட்லூர் கருணை விழிகள் இல்லம், கடலூர் புனித அன்னாள் நர்சரி- பிரைமரி பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது. 
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், சார்- ஆட்சியர் கே.எம்.சரயூ, பயிற்சி ஆட்சியர் ஹாகிதாபர்வீன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியை வட்டாட்சியர் ஜெ.ஜான்ஸிராணி, வருவாய் ஆய்வாளர் உ.சஞ்சய் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT