எலிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

வயல்களில் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாட்டு முறை குறித்து கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 

கடலூர்: வயல்களில் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாட்டு முறை குறித்து கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எலிகளால் ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமடைகின்றன. 
இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் தாங்கள் உண்பதை விட 10 மடங்கு உணவுப் பொருள்களை சேதப்படுத்துகின்றன. 8 ஜோடி எலிகள் ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை உண்கின்றன. ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் 6 எலிகள் வரை வாழ்கின்றன. 
சேமித்து வைத்திடும் விதைகள், தானியங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடு, நோய்களையும் பரப்புகின்றன. 
 எலிகள் இனச் சேர்க்கை ஏற்பட்ட 21 முதல் 24 நாள்களில் குட்டிகளை ஈனுகின்றன. ஒரு ஈத்தில் 6 முதல் 8 குட்டிகள் வரை பிறக்கின்றன. இக்குட்டிகள் தங்களது 3-ஆவது மாதத்திலிருந்து இன விருத்திக்கு தயாராகின்றன. ஒரு ஜோடி எலிகள் ஒரு ஆண்டில் 1,400 எலிகளாகப் பெருகுகின்றன. இவை 2 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.
 எலிகளை அழித்திட வயல்களில் வடிவ குச்சிகளை பயிர்க் காலத்தில் நட்டு வைக்க வேண்டும். இதில் அமரும் ஆந்தைகள், கழுகுகள் எலிகளை பிடித்து விடும். கோடையில் வரப்புகளை வெட்டி எலிகளை அழிக்கலாம். நெல் பயிரில் ஏக்கருக்கு 25 தஞ்சாவூர் கிட்டிகள் வைத்து எலிகளை அழிக்கலாம்.
விஷ உணவு வைத்தல்: சிங்க்பாஸ்பைடு நச்சு உணவு கலவை வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம். உணவு பொருள் (பொரிகருவாடு) 97 கிராம், சமையல் எண்ணை ஒரு கிராம், சிங்க்பாஸ்பைடு 2 கிராம் ஆகிய மூன்றையும் கைப்படாமல் குச்சிக்கொண்டு நன்கு கலந்து எலி நடமாட்டம் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 10 இடங்களில் தேங்காய் ஓடு கொண்டு மூடி வைக்க வேண்டும்.  
நச்சு உணவு வைப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு நச்சு கலப்பில்லாத உணவு மட்டும் வைத்து எலிகளை கவர வேண்டும். பின்னர் எந்தெந்த இடத்தில் உணவுப் பொருள்கள் சாப்பிடப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் நச்சு உணவு வைத்து எலிகளை அழிக்கலாம். 
 வீடுகளில் வார்பரின், ரோடாபரின் என்ற பெயர்களில் கிடைக்கும் மருந்தை உணவில் கலந்து வைக்க வேண்டும். 
இதை எலிகள் 4 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டால் அதன் ரத்தக் குழாய் வெடித்து சாகும். இது எலிகளை மெல்ல கொல்லும் மருந்தாகும். எனவே, விவசாயிகள் அனைவரும் ஒரே நாளில் விஷ உணவை தங்களது வயல்களில் வைப்பதன் மூலமாக அதிகப்படியான எண்ணிக்கையில் எலிகளைக் கட்டுப்படுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com