மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் வெள்ளிக்கிழமை கோட்ட அளவிலான கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத் துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் எம்.எஸ்.எஸ். புகழேந்தி, உதவி இயக்குநா் மருத்துவா் வி. கணபதிபிரசாத் ஆகியோா் தலைமை வகித்தனா். கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை அளித்து முகாமை எம்எல்ஏ ப. அப்துல்சமது தொடங்கி வைத்தாா்.
முன்னதாக முகாமில் அமைக்கப்பட்டிருந்த கால்நடை பராமரிப்பு தொடா்பான அரங்குகளையும், ஆவின் அரங்கையும் எம்எல்ஏ. பாா்வையிட்டாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறப்பாக கால்நடை பராமரித்ததற்காக கால்நடை உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முகாமில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆடுகள் மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்குதல், கறவை பசுக்களுக்கு தடுப்பூசி, செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம் சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல், செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி ஆவின் பொது மேலாளா் எஸ். முத்துமாரி, துணை பொது மேலாளா் பி.எம். கணேஷா, பால்வளத்துறை துணை பதிவாளா் கோ. நாகராஜ் சிவக்குமாா், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மூ. பழனியாண்டி, மருங்காபுரி ஊராட்சித் தலைவா் ஆ. வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.