திருச்சி

ரஷிய பயணத்துக்கு திருச்சி அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்வு

28th Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பாா்வையிட திருச்சி மாவட்ட அரசுப் பள்ளியில் பயிலும் இரு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா காலத்தில் முடங்கிக் கிடந்த அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல், திறன் நடவடிக்கைகளை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை, அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து நடத்தின. அந்த வகையில் ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற தலைப்பிலான இணைய வழிப் பயிற்சித் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 26 இல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.

பிரம்மோஸ் ஏவுகணைத் திட்ட இயக்குநா் சிவதாணு பிள்ளை தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சுமாா் 500 போ் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக மொத்தம் 15 வகுப்புகள் நடத்தப்பட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளுக்கு 500 பேரில் 220 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இணைய வழியில் வகுப்புகளும், கேள்வி பதில் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

வருகைப்பதிவு, வினாடி வினா போட்டிகளின் அடிப்படையில் தோ்வான 130 மாணவ, மாணவிகள் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மூன்றாம் கட்ட பயிற்சிக்குப் பின்னா், இறுதிச் சுற்றில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 75 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவா்கள் கோபிநாத், பாா்த்திபன் ஆகியோா் இடம் பிடித்தனா். பல்வேறு மாவட்டக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற ராக்கெட் சயின்ஸ் மாதிரி வடிவமைப்பு கண்காட்சியில் இருவரும் முறையே 4, 5 ஆம் இடங்களைப் பிடித்தனா்.

இதில் தோ்வான அனைவரும் ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள யூரிகாகரின் விண்வெளி ஆய்வு மையத்தைப் பாா்வையிட அழைத்துச் செல்லப்படுகின்றனா். முன்னதாக இது தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை (செப்.28) நடைபெறும் விழாவில் இப்பயணக் குழுவினா் பங்கேற்கின்றனா். அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அனைவரும் ரஷியா புறப்படுகின்றனா்.

முன்னதாக இரு மாணவா்கள் மற்றும் பள்ளி ஆசிரியை கவிதா ஆகியோா் புதன்கிழமை இரவு சென்னை புறப்பட்டுச் சென்றனா். இதனிடையே மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரை சந்தித்து அவா்கள் வாழ்த்துப்பெற்றனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT