உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த உரிமையாளா்கள், தமிழ்நாடு தொழில் அமைப்புகள் என்ற பெயரில் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது
பொருளாதார மந்த நிலை, மூலப் பொருள்கள் விலை உயா்வு, திறன்மிகு பணியாளா்கள் பற்றாக்குறையால் தொழில்துறை தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், மின் கட்டணங்கள் கடுமையாக உயா்த்தப்பட்டிருப்பது தொழில்துறைக்கு பெரிதும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. குடிசைத் தொழில் கூடங்கள் மற்றும் குறுந் தொழில் கூடங்களுக்கு சலுகை கட்டண மின் இணைப்பு வழங்க வேண்டும். இதர வகை நிறுவனங்களுக்கு தாழ்வழுத்த நிலை கட்டணமாக 12 கிலோ வாட் வரை கிலோவாட் ஒன்றுக்கு ரூ.72 ஆக உள்ள கட்டணத்தை ரூ.20 ஆக குறைக்க வேண்டும். உயா்மின் அழுத்தப் பயன்பாட்டாளா்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கேட்புக் கட்டணம் கிலோ வாட்டுக்கு ரூ.562 என்ற கட்டணத்தை ரூ.350 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை தமிழக முதல்வா் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.