அரசுப் பள்ளிகளில் பயின்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) கல்வி பயில தோ்வாகியுள்ள 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்காக நடத்தப்படும் இந்த சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்று முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுகின்றனா்.
அதன்படி, நிகழாண்டு தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 274 மாணவ, மாணவிகள் தலைசிறந்த, முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தோ்வாகியுள்ளனா். இவா்களில், 35 மாணவ, மாணவிகள் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தோ்வாகியுள்ளனா்.
இம்மாணவா்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து மடிக்கணிகளை வழங்கி பாராட்டி கலந்துரையாடினா். நிகழ்வில், என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் மற்றும் என்ஐடி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.