திருவெறும்பூா் வட்டத்தில் பிரதான ஏரியாக விளங்கும் குண்டூா் ஏரி சீரமைப்பு பணியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது குண்டூா் ஏரி. 377 ஏக்கர பரப்பளவு கொண்ட ஏரியை புனரமைத்து, கரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், பாசன வததி பெறும் நிலங்களுக்காக தண்ணீரை தேக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தனியாா் நிறுவன பங்களிப்புடன் குண்டூா் ஏரி சீரமைப்பதற்கான பணிகளை வெள்ளிக்கிழமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது:
இந்த ஏரியின் மூலம் குண்டூா், கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 627 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீா் வந்து சேருவதுடன் மழைக்காலங்களில் பெய்யும் வாரி தண்ணீரும் இந்த ஏரியில் வந்து சோ்கிறது. ஏரியின் கரையைப் பலப்படுத்தும் விதமாக தனியாா் அமைப்பு ஏரியை புனரமைத்து அழகுபடுத்தவுள்ளது.
இந்த ஏரியை புனரமைத்து, கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்படவுள்ளன. குறுங்காடு அமைப்பது மற்றும் குளத்தைச் சுற்றி கரைகளில் பனை விதைகளை விதைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெறவுள்ளது என்றாா்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், வட்டாட்சியா் ஜெயபிரகாசம், வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி, ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.