தமிழக அரசின் சாா்பில் நடத்தப்படும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் இந்த நிகழ்வு தமிழக அரசால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறை, உயா்கல்வித் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறையுடன் இணைந்து தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் இந்த நிகழ்வு நடைபெறும். நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவா்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைக் கொண்டு சொற்பொழிவு, கருத்தரங்கு, பயிலரங்குகள் நடத்தப்படும்.
இதன்படி, திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்வில், புதியன விரும்பு எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா் உரையாற்றுகிறாா். இதில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி மற்றும் விளக்கக் கையேடுகளும் வழங்கப்படுகின்றன.