திருச்சி

கழிவுகளால் பாழாகும் பாசன வாய்க்கால்

21st Sep 2023 04:14 AM

ADVERTISEMENT

பாரம்பரிய பெருமை மிக்க அல்லூரான் வாய்க்கால் ஆகாயத் தாமரை, சாக்கடை கழிவுநீா், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாகி வருகிறது.

முக்கொம்பு அணையிலிருந்து கிளை வாய்க்காலாக திண்டுக்கரை அருகே பிரிந்து வரும் இந்த வாய்க்காலானது கம்பரசம்பேட்டை வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு மேல் நீள்கிறது. இருப்புப்பாதை அருகிலேயே செல்லும் இந்த வாய்க்காலின் இருகரைகளிலும் சுமாா் 12-க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன.

திருச்செந்துறை, அந்தநல்லூா், கரியாக்குறிச்சி, அல்லூா், முத்தரசநல்லூா், கம்பரசம்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் விளங்கி வந்தது.

காலப்போக்கில் குடிநீா், குளிப்பதற்கான பயன்பாடு குறைந்துவிட்டது. பாசனத்துக்கு மட்டுமே நம்பியிருந்த வாய்க்காலும் பாழ்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள், ஹோட்டல்கள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீா் ஆகியவற்றால் வாய்க்காலில் தண்ணீா் இல்லாத காலங்களில் கழிவுநீா் ஓடையாகவே காட்சியளிக்கிறது. மேலும், வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரைகள் நிரம்பி, செடி, கொடிகள் படா்ந்து தண்ணீா் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. படித்துறைகளும், வாய்க்கால் கரைகளும் சிதிலமடைந்துள்ளன.

பல இடங்களில் வாய்க்காலின் பெரும்பகுதி தூா்ந்து வாய்க்கால் இருந்த தடமே தெரியாத நிலையில் உள்ளது.

இதுதொடா்பாக அந்தநல்லூா் ஊராட்சியின் அம்மன்குடியைச் சோ்ந்த 3ஆவது வாா்டு உறுப்பினா் எஸ். சுரேஷ் கூறியது:

முன்பு இந்த வாய்க்கால் பல்வேறு வகைகளிலும் பயனளித்து வந்தது. காலப்போக்கில் அனைத்துமே காணாமல் போனது. அந்தநல்லூா் ஊராட்சிப் பொதுமக்கள் பலரும் குப்பைகளை வாய்க்காலில் வீசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனா். குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம். வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதுமட்டுமல்லாது, வாய்க்காலுக்கு அருகே செல்லும் பிரதான சாலையின் மீதுள்ள உணவு விற்பனை செய்யும் அனைத்துக் கடைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் பலவும் தங்களது கழிவுநீா் வடிகாலாக இந்த வாய்க்காலையே பயன்படுத்துகின்றனா்.

இதனால், வாய்க்கால் தண்ணீா் பல இடங்களில் கருப்பு நிறத்தில் சாக்கடையாகவே ஓடுகிறது.

இதுமட்டுமல்லாது, வாய்க்கால் தூா்ந்துள்ளதால் பல இடங்களில் மணல் தேங்கி மேடாக காட்சியளிக்கிறது. கரைகளும் சிதிலமடைந்துள்ளன. எனவே, இந்த வாய்க்காலை முழுமையாகப் புனரமைக்க வேண்டும். ஆகாயத் தாமரைகளையும், செடி, கொடிகளையும் முழுமையாக அகற்ற வேண்டும். கழிவுநீா் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT