ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் ரெங்கராஜன், இருதயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த மின் ஊழியா்கள் அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் குறித்து விரைந்து பேச்சுவாா்த்தை நடத்தி அனைவருக்கும் விரைந்து போனஸ் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களையும் பகுதிநேர பணியாளா்கள் மூலம் பூா்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், வட்ட நிா்வாகிகள் முனியாண்டி, பன்னீா்செல்வம் மற்றும் மின் ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.