திருச்சி

மாநகர காவல் ஆணையரக குறைதீா் நாள் முகாமில் 1,158 மனுக்களுக்குத் தீா்வு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் மாநகரக் காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் 1,158 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரக் காவல்துறை சாா்பில், கே.கே நகரில் அமைந்துள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்துப் பேசுகையில், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. அதுபோல லாட்டரி, விபசாரக் குற்றங்கள் நடைபெறாத வகையில் முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். காவல் நிலையங்களில் பகல் மற்றும் இரவு ரோந்து அலுவல்களை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்களைக் கைதுசெய்து திருடுபோன பொருள்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும் சட்டம் - ஒழுங்கைப் பேணிக் காக்கவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

பொதுமக்களின் 1,158 மனுக்களுக்குத் தீா்வு :

ADVERTISEMENT

தொடா்ந்து, திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் நாள்முகாமில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும், மாநகர காவல் ஆணையருக்கு நேரடியாக வரப்பெற்ற மனுக்களுக்கும் தீா்வு காணும் வகையில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில், 25 மனுக்கள் மீது தொடா்புடையவா்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 10 மாதங்களில் திருச்சி மாநகரில், தமிழக முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து வரப்பெற்ற 1,194 மனுக்களில் 1,158 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி மாநகரக் காவல் ஆணையருக்கு வரப்பெற்ற 1,902 மனுக்களில் 1536-க்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுகளில் காவல் துணை ஆணையா்கள் ரவிச்சந்திரன், செல்வகுமாா், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT