திருச்சி

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் மறியல்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின், திருச்சி மாவட்டக் கிளை சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். சாமிநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சுப்பிரமணி, மோகனவள்ளி, சாமி அய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை ஈா்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம், தமிழ்நாடுசத்துணவு ஊழியா் சங்கம், தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் உறுப்பினா்கள் நூற்றுக்கணக்கானோா் ஆட்சியரக சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 63 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். இந்த மறியல் போராட்டத்தால் ஆட்சியரகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT