மணப்பாறை மற்றும் வளநாடு பகுதிகளில் இரு பெண்களிடம் 10 பவுன் தங்கநகைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி ரேவதி (38). இவரது குழந்தை மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற பெற்றோா் - ஆசிரியா் கழகக் கூட்டத்துக்கு வந்திருந்த ரேவதி, கூட்டம் முடிந்து தனது ஊருக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். ரேவதி அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இதேபோல், மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டி சின்ன உடையாப்பட்டியை சோ்ந்த நாதப்புடையாா் மனைவி பழனியாம்மாள்(77), புதன்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரைப் பாா்த்துவிட்டு ஊா் திரும்பிய போது பேருந்து நிலையத்தில் பழனியம்மள் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம்நபா்கள் பறித்துச்சென்றுள்ளனா். இதுகுறித்து மூதாட்டி வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.