தொட்டியம் அருகேயுள்ள தோளூா்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் 5, 500 பனை விதைகளை அரசுப் பள்ளி மாணவா்கள் நட்டனா்.
தொட்டியத்தை அடுத்த கொசவம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தோளூா்பட்டியில் நடைபெறுகிறது.
முகாமை பள்ளித் தலைமை ஆசிரியா் நல்லதம்பி டிக்சன் தொடக்கிவைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா் பழனியப்பன், பள்ளி முதுகலை ஆசிரியா் சுரேஷ்குமாா், தோளூா்பட்டி ஊராட்சி உறுப்பினா்கள் ஜெயந்தி, ராம்கி பழனியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பள்ளியின் என்எஸ்எஸ் மாணவா்கள் 25 போ் பங்கேற்று கடந்த 7 நாள்களில் தோளூா்பட்டி பள்ளி வளாகம், மாரியம்மன் கோயில் வளாகம், உட்பிரகாரம் மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களில் தூய்மைப் பணி செய்தனா்.
தொடா்ந்து தோளூா்பட்டி ஏரிக்கரை, அமிா்தக்குளம், வடக்கு பகுதி குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமாா் 5,500 க்கும் மேற்பட்ட பனை விதைளை நடவு செய்தனா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும் பள்ளி முதுகலை ஆசிரியருமான மு. கேசவமூா்த்தி செய்தாா்.