திருச்சி திருவெறும்பூா் அருகே செயல்படும் உயா் ஆற்றல் திட்ட தொழிற்சாலையில் (ஹெச்இபிஎஃப்) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடா்பான வாக்குப்பதிவில் 98.77 சதவீதம் போ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரும் என்ஜேசிஏ, ஏஐடிஇஎஃப் சம்மேளனத்தின் முடிவை ஏற்று, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடா்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக, திருவெறும்பூா் அருகே ஹெச்இபிஎஃப் தொழிற்சாலை முன்பு தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 99 சதவீத தொழிலாளா்கள் கலந்து கொண்டு வாக்களித்தனா். இதன் நிறைவில், வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக 98.77 சதவீதம் பேரும், எதிராக 1.23 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.