சவூதி அரேபியாவில் உயிரிழந்த திருச்சி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியா், அமைச்சா் உள்ளிட்டோருக்கு குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான் கோட்டை முல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ராஜசேகா் (43). இவருக்கு ரோஸ்லின் மேரி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.
கடந்த 2 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் தோட்ட வேலை செய்து வந்த ராஜசேகா், அங்கு நவம்பா் 18 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்ற மனைவி ரோஸ்லின், குழந்தைகள் மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனா்.
ராஜசேகரின் உடலை சொந்த ஊா் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் மற்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளனா்.