தமிழகத்துக்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
திருச்சி மாவட்டம், லால்குடியில் பாஜக சாா்பில் ‘என் மண்- என் மக்கள்’ என்ற அண்ணாமலையின் நடைப்பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஆங்கரை பகுதியில் அண்ணாமலைக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்து திருச்சி பிரதான சாலை வழியாக மலையப்புரம், சந்தைப்பேட்டை, லால்குடி ரவுண்டானா வரை அவா் நடைப்பயணம் மேற்கொண்டாா்.
அங்கு வேனில் நின்றபடி அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் இளைஞா்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாகும். நீங்கள் முன்னேற வேண்டும் என்று நாங்கள் (பாஜக) அரசியல் செய்து வருகிறோம். திமுக ஆட்சியில் முறைகேடுகள், ஊழல் மலிந்துள்ளது. தமிழகத்துக்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு ரூ. 467 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. திமுக அரசு திராவிட மாடல் அரசு அல்ல; டாஸ்மாக் மாடல் அரசு. திமுக என்னும் தீயசக்தியை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
3ஆவது முறையாக மோடி பிரதமராக மக்களவைத் தோ்தலில் மக்கள் பாஜக-வை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், புகா் மாவட்ட தலைவா் அஞ்சா நெஞ்சன், மாவட்ட பாா்வையாளா் லோகிதாசன்,
மாவட்ட பொது செயலாளா் சபரி, மாவட்ட செயலாளா் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உட்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.