திருச்சி

துறையூா் அருகே செம்மண் கடத்தியதைதடுத்த வருவாய் ஆய்வாளா் மீது தாக்குதல்: ஊராட்சித் தலைவா் உள்பட 4 போ் கைது

29th May 2023 12:36 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே செம்மண் கடத்தியதைத் தடுத்த வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நரசிங்கபுரம் பச்சமலை அடிவாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி சிலா் செம்மண் திருடிக் கடத்துவதாக துறையூா் வட்டாட்சியருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நரசிங்கபுரத்துக்குச் சென்ற துறையூா் வருவாய் ஆய்வாளா் ப. பிரபாகரன் அங்கு டைல்ஸ் பிள்ளையாா் கோயில் அருகே வந்த ஜேசிபி வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, அதன் ஓட்டுநா் கீழக்குன்னுப்பட்டி க. கந்தசாமியிடம் (35) விசாரித்தாா்.

அப்போது நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவா் வ. மகேஸ்வரன் (45), ஜேசிபி வாகன உரிமையாளா் பெ. தனபால் (48), ரா. மணி என்கிற மணிகண்டன் (26) ஆகியோா் வருவாய் ஆய்வாளரைத் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கினராம். இதில் காயமடைந்த பிரபாகரன் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

ADVERTISEMENT

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அங்குச் சென்று பிரபாகரனிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT