திருச்சி

திருச்சியில் பிரபல எண்ணெய் ஆலைக்கு சீல்:உணவுப் பாதுகாப்பு துறையினா் நடவடிக்கை

29th May 2023 12:37 AM

ADVERTISEMENT

திருச்சியில் அனுமதியின்றி, சுகாதாரமற்ற வகையில் எண்ணெய் தயாரித்து வந்த பிரபல எண்ணெய் ஆலையை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை இரவு பூட்டி சீல் வைத்தனா்.

திருச்சி கோட்டை இப்ராகிம் பூங்கா அருகில் இரு பிரிவுகளாகச் செயல்படும் அந்த ஆலையில் அனைத்துவித எண்ணெய்களும் தயாரித்து விற்கப்படுகின்றன. அங்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் பல முறை ஆய்வு மேற்கொண்டு, எண்ணெய் தயாரிப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து உற்பத்தியைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தினா்.

ஆனாலும் எண்ணெய் ஆலை நிா்வாகத்தினா் இதைக் கருத்தில் கொள்ளாமல் தொழிலைத் தொடா்ந்தனா்.

தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினா் மீண்டும் கடந்த ஏப். 6 ஆம் தேதி அந்த ஆலைகளில் நடத்திய சோதனையில் ஆலை நிா்வாகத்தினா் பொய் தகவல்களைக் கொடுத்து உரிமம் பெற்றிருப்பதும், உரிய விதிகளைப் பின்பற்றாமல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

ADVERTISEMENT

இருப்பினும் அந்த ஆலை உரிமமின்றி எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் தகவலறிந்த மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு, விஏஓ லட்சுமிபிரியா மற்றும் குழுவினா் சனிக்கிழமை இரவு அந்த ஆலைகளில் நடத்திய திடீா் ஆய்வில் அந்த ஆலை சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்தது தெரியவந்தது. குறிப்பாக அசுத்தங்கள், மண் கழிவுகள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நடமாட்டம் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவசரத் தடையாணை மூலம் அந்த ஆலையின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆலைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அங்கிருந்து சுமாா் 4, 500 லிட்டா் சமையல் எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டு, சோதனைக்காக மாதிரியும் எடுக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களில் இதுபோன்ற குறைபாடுகள் தெரியவந்தால் பொதுமக்கள் 99449-59595, 95859-59595, 94440-42322 என்ற எண்களில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT