திருச்சி

கடைமடை வரை மேட்டூா் அணை நீா் செல்வதை உறுதி செய்ய வேண்டும்:மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்

28th May 2023 01:06 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணை நீா் கடைமடை வரை தடையின்றிச் செல்லும் வகையில் தூா்வாரும் பணிகளை விரைந்து முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் முதன்மைச் செயலா் க. மணிவாசன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலராக இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் க. மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், திருச்சிக்கு வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் பல்வேறு துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், பல்வேறு துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், இணைய வழி பட்டா மாறுதல், இணையவழி சான்றிதழ்கள் வழங்குதல் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் பணி முன்னேற்றம் குறித்தும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்திட்ட துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சா், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, பஞ்சப்பூா் அருகில் உள்ள கே.சாத்தனூா் கிராமம், கோரையாற்றில் நடைபெற்றுவரும் தூா்வாரும் பணிகள், திருவெறும்பூா் வட்டம், எல்லக்குடி கிராமம், உய்யக்கொண்டான் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலா் க. மணிவாசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

மேட்டூா் அணை நீா் கடைமடை வரை செல்லும் வகையில் தூா்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். அணை திறப்புக்கு முன்னதாகவே பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், நீா்வளத்துறை செயற்பொறியாளா்கள் நித்தியானந்தன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT