திருச்சி

அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

23rd May 2023 02:13 AM

ADVERTISEMENT

அரசு வழங்கிய நிலத்துக்கு நத்தம் மனைப் பட்டா வழங்க வேண்டும் என வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். இதில்,

பட்டா வழங்க வேண்டும், குடும்ப அட்டை, உதவித் தொகை உள்ளிட்ட மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், சோமரசம்பேட்டையை சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை அளித்த மனு: மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம், போதை மருந்து, போதை ஊசி, கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மே 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் விவசாயிகள் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

பட்டா வழங்கக் கோரி மனு: வாழவந்தான்கோட்டை அன்னை தெரசா நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், திருவெறும்பூா் அடுத்த அன்னைதெரசா நகரில் 1997-98ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வா் கருணாநிதியால் 383 பேருக்கு ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் சாதி மத பேதமின்றி வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா். எனவே இந்த பகுதிக்கு நத்தம் மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது இடத்தை மீட்க வேண்டும்: வாழவந்தான்கோட்டை பெரியாா் நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், பெரியாா் நகரில் 1992ஆம் ஆண்டு அரசு சாா்பில் ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்கியதுடன் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த பகுதிக்கு பொது இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த பொது இடத்தை சிலா் ஆக்கிரமித்து விற்பனை செய்து விட்டனா். இதுகுறித்து 2004ஆம் ஆண்டு முதல் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மயானத்தை சீரமைக்க மனு: தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தினா் அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் கொண்டையம்பேட்டை பகுதியில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும். கிராம நிா்வாக அலுவலகம் கட்ட வேண்டும். மயானத்தை சீரமைக்க வேண்டும் என்பன பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கொண்டையம்பேட்டை மயானத்தில் மனுக்களின் நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு நகல்களின் சாம்பலை காவிரி ஆற்றில் கரைப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT