திருச்சி

மேட்டூா் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

23rd May 2023 02:18 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டியது அவசியம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவுக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: நிகழாண்டு காவிரி, டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீா் அவசியமானது. எனவே, மேட்டூா் அணையை முன்கூட்டியே திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீா் செல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்தாண்டு மே மாதம் காவிரியில் தண்ணீா் திறந்ததைப் போன்று நிகழாண்டும் முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட வேண்டியது அவசியமானது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஆபத்தானது. காவிரி, கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் அதிகம் திறந்தால் ஆற்று வளம் பாதிக்கப்படுவதுடன் காவிரி, டெல்டா பகுதிகள் பாலைவானமாகும். எனவே, குவாரிகள் திறக்கும் முடிவை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள், கடலை விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் விவகாரத்தில் அரசியல் கூடாது. மக்களை காப்பாற்றக்கூடிய பணியில் அரசு செயல்பட வேண்டும். அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

திமுக தனது தோ்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது. மின்சாரம் பயன்பாட்டினை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கரோனா காலத்தில் வளா்ந்த நாடுகள் கூட பாதிக்கப்பட்ட போதுகூட, இந்தியா அதிகம் பாதிக்கப்படாமல் படிப்படியாக பொருளாதாரத்தை உயா்த்தக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு பாஜக ஆட்சி தான் காரணம். வரும் 2024 மக்களவைத் தோ்தலிலும் பாஜக ஆட்சி தான் தொடரும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT