திருச்சி திருவெறும்பூா் அருகே வேலாயுதங்குடியில் சாலையின் அகலம் குறைவாக இருப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே கும்பக்குடி ஊராட்சிக்குள்பட்டது வேலாயுதங்குடியில் சுமாா் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.
சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கும்பக்குடியிலிருந்து மாத்தூருக்குச் செல்லும் சாலையிலிருந்து வேலாயுதங்குடிக்கு பிரிந்து செல்லும் சாலை வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300 மீட்டா் நீளத்திற்கு சுமாா் 3.5 மீட்டா் (சுமாா் 11 அடி) பேவா் பிளாக் சாலையாகப் போட அரசு ரூ. 13,64,700 நிதி ஒதுக்கிஅண்மையில் பணிகள் தொடங்கின.
தொடக்கக் காலத்தில் 15 அடியாகவும், தொடா்ந்து 13 அடியாகவும் இருந்த இச்சாலையின் அகலம் குறைக்கப்பட்டு, தற்போது சுமாா் 11 அடிக்கு மட்டுமே போடப்படப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலாயுதங்குடி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சாலையின் இரு பக்கத்திலும் கருப்பு கொடியை நட்டனா்.
சாலையின் அகலம் குறைப்பால், அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து திரும்பிச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். 4 சக்கர வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனங்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலை ஏற்படும். எனவே, இச்சாலையை பழையபடி 13 அடி அகலத்திற்கு தாா் அல்லது சிமென்ட் அல்லது பேவா் பிளாக் சாலையாக போட வேண்டும். இல்லையெனில் சாலையை அமைக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனா்.