ஆசிய பளு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய மாணவா் ஆா். தினேஷுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி (ஆசிய பவா் லிப்டிங்) கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திருச்சி சுப்பிரமணியபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவரும், தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவருமான ஆா். தினேஷ் (17) சப்-ஜூனியா் 66 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஸ்குவாட்டில் 232.5 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 130 கிலோ எடை தூக்கி தங்கமும், டெட் லிப்டில் 235 கிலோ எடை தூக்கி தங்கமும் என மொத்தம் 597.5 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என 4 தங்கப் பதக்கங்களை வென்றாா்.
சப்ஜுனியா் பிரிவில் அனைத்து எடைப் பிரிவுகளிலும் அதிகபட்ச எடை தூக்கியவா் என்பதைப் பாராட்டி இவருக்கு ’ஸ்ட்ராங்மேன்’ என விருதும் வழங்கப்பட்டது.
இவா் ஏற்கெனவே நவம்பா் 2022 இல் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பவா்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று, ஸ்ட்ராங்மேன் விருதும், டெட் லிப்டில் முந்தைய சாதனையையும் முறியடித்தாா். மேலும் புதுதில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற 10 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் ஜூனியா் வோ்ல்டு சாம்பியன் தகுதிச் சுற்றில் அடுத்த சுற்றுக்குத் தோ்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வென்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி திரும்பிய தினேஷை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், தண்ணீா் அமைப்பு செயலா் கி. சதீஷ்குமாா், திருச்சி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் கோவிந்தசாமி, உடற்பயிற்சி மைய நிா்வாகி ஜூபோ் அகமது உள்ளிட்டோா் மாலை அணிவித்து வரவேற்றனா்.
தொடா்ந்து, ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோருடன் மேளதாளங்கள் முழங்க தென்னூா் ராமலிங்க நகரிலிருந்து தினேஷின் வீடு வரை ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.