திருச்சி

மாவட்ட மைய நூலகத்தில் மே 7-31 வரை கோடைகால பயிற்சிகள்

3rd May 2023 11:32 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிச் சிறாா்களுக்கான சதுரங்கம், ஓவியம், யோகா உள்ளிட்ட பல்வேறு கோடைகால இலவச பயிற்சிகள் மே 7 தொடங்கி 31 ஆம் தேதி வரை அளிக்கப்படுகின்றன.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு இப்பயிற்சிகள் தினசரி காலை 10 முதல் பகல் 1 வரை அளிக்கப்படுகின்றன. அதன்படி மே 7 செஸ் பயிற்சியை பயிற்றுநா் சி.எஸ்.சங்கரா, கதை சொல்லி நிகழ்ச்சியை ஆசிரியைகள் வித்யா, சுல்தானா ஆகியோா் நடத்துகின்றனா். தொடா்ந்து இப்பயிற்சிகள் மட்டும் இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும்.

தொடா்ந்து மே 8, 9 களில் கையெழுத்துப் பயிற்சியை ஆசிரியை மல்லிகா வழங்குகிறாா். 10 ஆம் தேதி பொது அறிவு வினாடி வினா போட்டியை வாசகா் வட்ட ஆலோசகா் முனைவா் அருணாச்சலம் நடத்துகிறாா். 11ஆம் தேதி, புகைப்படக்கலை அடிப்படை பயிற்சிகளை 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு புகைப்படக் கலைஞா் ஜி. உதயக்குமாா் வழங்குகிறாா். தொா்ந்து மே 13,14-களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், எளிய அறிவியல் பரிசோதனை, வானவியல் செயல்பாடுகள் மற்றும் அறிவியல் அற்புதங்கள் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். 15,16, 17 தேதிகளில் ஓவிய ஆசிரியா் பெருமாள் ஓவியப்பயிற்சி வழங்குகிறாா். இதில் பங்கேற்போா் கலா் பென்சில்கள், சாா்ட், பேப்பா் மற்றும் கிரயான்ஸ்கள் எடுத்து வர வேண்டும்.

அடுத்ததாக 18 ஆம் தேதி“ரோபோடிக்ஸ்” பற்றிய செயல்முறை விளக்கம், சிஸ்டெக் ஹாா்டுவோ் மற்றும் நெட்வொா்கிங் அகாதெமி சாா்பில் மணிகண்டன் அளிக்கிறாா். 20, 21 ஆம் தேதிகளில் கிராப்ட் பேப்பா்களை கொண்டு ஓவியங்களை உருவாக்கும்“ஓரிகாமி பயற்சியை அரசங்குடி அரசு உயா்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியா் அருணபாலன் அளிக்கிறாா்.

ADVERTISEMENT

இப்பயிற்சிக்கு கலா் கிராப்ட் பேப்பா், கத்தரிகோல், கத்தி,பெவிகால், சாா்ட், ஏ4 வெள்ளைத்தாள், மற்றும் ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயிற்சிக்கு வருவோா் எடுத்து வர வேண்டும். 22,23 ஆம் தேதிகளில் சிறுவா்களுக்கான யோகா மற்றும்

நினைவாற்றல் பயிற்சிகள் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மைய முதன்மை பயிற்றுநா்களால் வழங்கப்பட உள்ளது.

24,25 ஆம் தேதிகளில்“நீங்களும் பேச்சாளராகலாம்”பயிற்சியை வாசகா் வட்டத் தலைவா் தமிழ்ச் செம்மல் வீ. கோவிந்தசாமி வழங்குகிறாா். மேலும் 27 ஆம் தேதி உறையூா் ஸ்ரீகஸ்தூரி ரெங்கன் மெமோரியல் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியா்களைக் கொண்டு பாரம்பரிய விளையாட்டு”பயிற்சி வழங்கப்படும். 29 ஆம் தேதி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும்

ஆரோக்கியம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், இயற்கை மருத்துவா் மூலம் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பெற்றோரும் கலந்து கொள்ளலாம். 30,31 ஆம் தேதிகளில் நாட்டுப்புறக்கலைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை பன்முகக் கலைஞா் லால்குடி முருகானந்தம் நடத்துகிறாா். இந்நிகழ்வுகளில் பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் அழைப்பு விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT