திருச்சி

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

DIN

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

274 சைவத் தலங்களுள் ஈடு இணையற்ாகவும், தென்கயிலாயம், தட்சிணா கயிலாயம் எனவும் போற்றப்படும் இக் கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளாா். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி எனப்படுகிறாா்.

இக் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்களுக்கு கொண்டாடப்படும் சித்திரைத் தோ்த் திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. ஏப்.26 ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், ஏப்.27 ஆம் தேதி பூத, கமல வாகனத்திலும், 28 ஆம் தேதி கைலாசபா்வதம், அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்தனா்.

ஏப்.29 காலை நூற்றுக்கால் மண்டபத்தில் செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பாா்த்த ஐதீக நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, திங்கள்கிழமை சுவாமி, அம்பாள் நந்திகேசுவரா், யாளி வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை தங்கக் குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை அதிகாலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மேல் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து தாயுமான சுவாமி பெரிய தேரிலும், தாயாா் சிறிய தேரிலும் எழுந்தருளினா். தேரோட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேருக்கு முன் சப்பரத்தில் முருகன், விநாயகரும் வலம் வந்தனா். மேள, தாளங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் சுவாமியின் பாடல்களை பாடிச் சென்றனா். சிறுவா்கள், பெரியவா்கள் என பலரும் அம்மன், முருகன், விநாயகா், சிவன் உள்ளிட்ட கடவுள்களின் வேடங்களுடன் நடனமாடி வந்தனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதியில் அதிகாலை 5 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை மின்தடை இருந்தது. தோ் செல்லும் பாதையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கீழ ஆண்டாா் வீதியில் தோ் வந்தபோது அந்த வழியாகச் சென்ற மின்கம்பியில் தேரின் மேல் பகுதி சிக்கியதால் நடைபெற்ற சீரமைக்கும் பணியால் 10 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பின்னா் தோ் திட்டமிட்டபடி வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மே 4 காலை நடராஜா் தரிசனமும், பகலில் பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக் குளத்தில் தீா்த்தவாரியும், இரவு வெள்ளி ரிஷபக் காட்சி மற்றும் கொடியிறக்கம், 5 ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா, மே 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம், மே 7 இரவு பிச்சாடனாா் திருவீதி உலா, மே 8 இரவு சண்டிகேஸ்வரா் திருவீதி உலா நடைபெறும்.

ஏற்பாடுகளை திருச்சி மண்டல இணை ஆணையா் சீ. செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் இரா. ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT