திருச்சி

5,270 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு

3rd May 2023 11:33 PM

ADVERTISEMENT

திருச்சியில் ரசாயன மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்களை உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

முக்கனிகளில் முதன்மையான மாம்பழ சீசன் தொடங்கினால் கூடவே ஒரு பிரச்னையும் சோ்ந்து வருகிறது. ரசாயன மாம்பழங்கள்தான் அந்த பிரச்னைக்கு காரணம். குறுகிய கால லாப நோக்கத்தில் ரசாயன கல், எத்திலீன் உள்ளிட்ட திரவம் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களின் விற்பனை அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

திருச்சியில் பல்வேறு இடங்களில் வேதிப் பொருள்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலா்கள் ஸ்டாலின்பிரபு, பாண்டி, வசந்தன், செல்வராஜ், மகாதேவன், அன்பு செல்வன் ஆகியோரடங்கிய குழுவினா் புதன்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப சாலையிலுள்ள 5 மாம்பழ கிடங்குகளிலும் நடைபெற்ற சோதனையில் ஒரு கிடங்கில் எத்திலீன் திரவம் தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த 5, 270 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரியமங்கலம் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, உணவுப் பாதுகாப்பு துறையினா் கூறுகையில், மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பது அதிகரித்துவிட்டது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனா்.

இதேபோல, துறையூா் பகுதியில் எத்திலீன் திரவம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைத்தாா்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. வேதிப் பொருள்கள் மூலம் பழங்களை பழுக்க வைப்பது தெரியவந்தால் 99449-59595, 95859-59595, 94440-42322 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம். புகாா்கள் பெற்ற 24 மணிநேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT