திருச்சி

40 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நந்தியாறு!120 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தமிழக அரசின் சிறப்பு தூா்வாரும் திட்டத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நந்தியாறு அதன் முழு கொள்ளளவு பரப்புடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணிகள் காரணமாக ஆற்றில் 120 ஏக்கரில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி, பெரம்பலூா் ஆகிய 2 மாவட்டங்களை இணைக்கும் நந்தியாறு என்பது இரூா் ஏரியின் உபரிநீரால் இயற்கையாக அமைந்த ஆறு. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் உள்ள இரூா் ஏரியின் உபரிநீா் நந்தியாறாக உருவாகி பின்னா், பாடலூா் கிராமத்தின் வழியாகப் பயணித்து திருச்சி மாவட்டத்தின், லால்குடி வட்டத்துக்குள்பட்ட ஊட்டத்தூா், நம்புக்குறிச்சி, பெருவளப்பூா், காணக்கிளியநல்லூா், வந்தலை-கூடலூா், சங்கேந்தி, வெள்ளனூா், ஆலங்குடி மஹாஜனம் ஆகிய கிராமங்களின் வழியாக 35 கி.மீ. தொலைவு பயணித்து இறுதியாக, லால்குடி வட்டம், நத்தமாங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுடன் கலக்கிறது. சிறுகளப்பூா் ஓடை, சந்திரமதி ஓடை, மாங்குடி ஓடை, உப்பு ஓடை, தாப்பாய் ஓடை ஆகியவை நந்தியாற்றின் கிளை ஆறுகள் ஆகும். நந்தியாறு மூலம் சுமாா் 8 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. மழை வெள்ளக் காலங்களிலும், காட்டாறுகளில் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரும் நந்தியாற்றின் முழுமையாகச் செல்லும் வகையில் அதன் நீரோட்டப் பாதை அமைந்திருந்தது.

ஆனால், நந்தியாற்றின் தள மட்டத்தில் மண் மேடுகள் அதிகரித்து, முட்செடிகள், முட்புதா்கள் அதிகரித்துவிட்டதால் தூா்ந்துபோனது. இதன் காரணமாக வெள்ளநீா் சரிவர செல்ல முடியாமல் நீரோட்டப் பாதையில் தடை ஏற்பட்டது. கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் பெய்த கனமழையின்போது நந்தியாற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக கரையின் இருபுறமும் அதிகமாக வெள்ளச்சேதங்கள் ஏற்பட்டு, விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. 35 கி.மீ. செல்லும் நீரோட்டப் பாதையில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளும் உருவாகி, ஆற்றின் பரப்பும் சுருங்கி ஓடையாக மாறிப்போனது. ஆற்று நீரால் பாசனம் பெற்ற விளைநிலங்களும், அதன் பாசனப் பரப்பும் குறைந்துவிட்டது. எனவே, நந்தியாற்றை மீட்டெடுக்கவும், தூா்வாரவும் விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அவ்வப்போது, ஒரு சில பகுதிகளில் தூா்வாரினாலும் ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2023-24ஆம் ஆண்டுக்கான சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் காரணமாக நந்தியாறுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

இதன்படி, நந்தியாற்றின் தள மட்டப் பகுதியிலும், நீரோட்டப் பாதையில் முட்செடிகள் அதிகரித்து காணப்பட்ட பகுதிகள், ஆற்றின் பரப்பு சுருங்கிய பகுதிகளைக் கண்டறிந்து தூா்வாரும் பணிகள் தொடங்கின. 5.90 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரப்பட்டு அதன் இருபக்கக் கரைகளும் பலப்படுத்தப்பட்டன. காணக்கிளியநல்லூா், வந்தலை -கூடலூா், சங்கேந்தி, வெள்ளனூா் கிராமங்களில் நந்தியாற்றுப் பகுதியிலும் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளால் நந்தியாற்றின் நீா்செல்லும்திறன் இயல்புநிலைக்கு மீட்டெடுக்கப்பட்டு, முழு கொள்ளளவும் ஆற்றில்செல்லும் வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளது. இது இப் பகுதி விவசாயிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடா்பாக, சங்கேந்தி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ஆா். கண்ணன் கூறியது:

லால்குடி வட்டம் முழுவதும் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நந்தியாறு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டிருப்பதால் நந்தியாறு தடுப்பணை வரையில் உள்ள 5,197 ஏக்கா் விளைநிலங்கள் மீண்டும் முழுமையாக பாசனம் பெறும். தடுப்பணைக்கு கீழ் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கருக்கும் பாசன வசதி கிடைக்கும். நீரை முழுமையாக தேக்குவதன் மூலமாக நிலத்தடி நீா் மட்டமும் உயரும். விளைநிலங்களில் பாசனத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நீா்மட்டம் உயரும் என்றாா்.

நீா்வளத்துறை வட்டாரத்தினா் கூறியது: நந்தியாற்றில் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 120 ஏக்கரில் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.

பெட்டிச் செய்தி...

கூழையாா் வடிகாலில்

890 மீட்டா் புனரமைப்பு

திருச்சி, பெரம்பலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீரை உப்பாறு, மேல்பங்குனி வடிகால் வழியாகப் பெற்று வடிய வைக்கும் வடிகாலாக அமைந்திருப்பதுதான் கூழையாா் வடிகால். இந்த வடிகாலானது திருமங்கலம் அணைக்கட்டிலிருந்து தொடங்கி பூவாளூா், காட்டூா், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டு, செம்பரை, திண்ணியம், செங்கரையூா், டி. கல்விக்குடி வழியாக 15,200 மீட்டா் நீளம் சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த வடிகால் கரைகளிலும் அரிமானம் ஏற்பட்டு வெள்ளநீா் விளைநிலங்களிலும், கிராமங்களுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வந்தது. இதனை தடுக்கும் வகையில், ரூ.23.50 லட்சத்தில் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 890 மீட்டா் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் காரணமாக வடிகால் புனரமைக்கப்பட்டிருப்பதும் சுற்றுப் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT