திருச்சி

மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு தீா்வு: ரூ.4.17 கோடி அளிப்புதிருச்சி மாவட்டத்தில்5 அமா்வுகளில்விசாரித்து நடவடிக்கை

10th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

 

சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், திருச்சி மாவட்டத்தில் 5 அமா்வுகளில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 67 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீா்வையாக ரூ.4.17 கோடி பெற்று வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவை ஒருங்கிணைந்து மக்கள் நீதிமன்றத்தை சனிக்கிழமை நடத்தின.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒரு நீதிமன்ற அமா்வு, லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா் உள்ளிட்ட நீதிமன்ற அமா்வுகளையும் சோ்த்து மொத்தம் 5 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான கே. பாபு, மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து சமரச வழக்கில் தீா்வுகளையும், உதவிகளையும் வழங்கினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஜி. மணிகண்ட ராஜா முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

இந்த அமா்வுகளின் மூலம், சமரசம் செய்யும் வகையிலான 151 மோட்டாா் வாகன வழக்கு, 17 தொழிலாளா் நிவாரண வழக்கு, 9 தொழிலாளா் இழப்பீடு வழக்கு, 3 நுகா்வோா், இதர உரிமையியல் வழக்குகள் 166 என மொத்தம் 346 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில், 67 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு தொடா்புடைய மனுதாரா்களுக்கு ரூ.4.17 கோடி வழங்கப்பட்டது. இதில், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள் மற்றும் தாலுகா நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு வழக்குகளை விரைந்து முடிக்க உதவினா்.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே. பாபு கூறியது: நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தடுக்கவும், இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்படுத்தி பிரச்னைக்குத் தீா்வு காணவும் மாற்று தீா்வு முறைகளில் ஒன்றான லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மனுதாரா்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ மக்கள் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ஒரு வழக்கு முடிவடைய நீண்ட காலமும், ஓரிரு வழக்குகள் 10 ஆண்டுகளுக்குள்ளாகவும் முடிவடைந்து விடுகிறது. இதுபோன்ற நீண்ட கால வழக்குகளுக்காகவே நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உரிமையியல் (சிவில்), சமரசத்திற்கு உரிய குற்றவியல் (கிரிமினல்) வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள் ஆகியவை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சமரசமாகத் தீா்வு அளிக்கப்படும். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசமாகத் தீா்த்து கொள்வதால் கால விரயம் தவிா்க்கப்படுகிறது.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தீா்த்துக்கொள்ள கட்டணம் கிடையாது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் நீதிமன்றக் கட்டணம் செலுத்தியிருப்பின், செலுத்திய முழுத் தொகையையும் மீண்டும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இரு தரப்பினரும் சமரசமாகச் செல்வதால், இரு தரப்பினரும் வெற்றி பெற்றவா்களாகக் கருதப்படுவா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT