திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் குழுவினா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து இந்த மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் விரைவில் புதுப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் குழு ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிா்வாகச் செயல்பாடுகள் திருப்தியாக உள்ள நிலையில் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது வழக்கமான நடைமுறை.
இந்த ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், தொடா்புடைய மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டால் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால் அங்கீகாரம் ரத்தாகும்.
அந்த வகையில் கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கிஆபெவி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்படாததும், அமைக்கப்பட்டிருந்த கேமராக்கள் பழுதாகி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இந்தக் குறைகளுக்காக 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேசிய மருத்துவஆணையம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், குறைகளைச் சரிசெய்ய கால அவகாசம் வழங்கியது. இதையடுத்து குறைகளைச் சரிசெய்து, அங்கீகார ரத்து நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியில் மூன்று மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களும் தீவிரமாக ஈடுபட்டன.
இதையடுத்து தருமபுரி, ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும் குறைகள் களையப்பட்டன. இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் அனைத்தும் தீா்வு காணப்பட்டதா என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து என்எம்சி மீண்டும் கல்லூரிக்கான அனுமதியை வழங்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்டபின் திருச்சி மருத்துவ கல்லூரியிலும் மாணவா் சோ்க்கை வழக்கம்போல நடைபெறும். திருச்சி மருத்துவக் கல்லூரியில் 150 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பும் பணிகளில் தொய்வு ஏற்படாது என்று கூறப்படுகிறது.