திருச்சி

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை154 இடங்களில் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு

3rd Jun 2023 03:30 AM

ADVERTISEMENT

 

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பாதிப்புக்குள்ளாகும் 154 இடங்களிலும் 24 மணிநேரமும் கண்காணிப்புக்குள்படுத்த வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது: தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் தினமும், இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை மழை அளவு அளிக்க ஏதுவாக பொறுப்பு அலுவலா்களை வட்டாட்சியா்கள் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே கண்டறிப்பட்டுள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளான 154 இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களுடன் 24 மணிநேரமும் தொடா்பிலிருந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். முதல்நிலை மீட்பு பணியாளா்களுக்கு கோட்டம், வட்டம் அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலம் உரிய பயிற்சி அளித்து அறிக்கை அனுப்ப வேண்டும். பாதுகாப்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். வெள்ள காலத்தில் சீரான குடிநீா், மின்சாரம் விநியோகிக்க வேண்டும். சுகாதாரத் துறை அவசர காலப் பிரிவு வாகன வசதிகளுடன் கூடிய மருத்துவக் குழு

அமைத்து 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். விதை, உரம் தேவையான அளவு, இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான தீவனத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்து நீா்நிலைகளிலும் கரைகளை கண்காணித்தும், தேவையான அளவு மணல் மூட்டைகளை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். நீா்நிலைகளில் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உரிய அலுவலா்களை நியமிக்க வேண்டும். மதகுகள், தடுப்பணைகள், கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பராமரிப்பு பணி தொடா்ந்து செய்ய வேண்டும்.

சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். ரயில்வே பாலத்துக்கு கீழே தேங்கக் கூடிய மழைநீரை பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும், இல்லாமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT