திருச்சி

காந்திச் சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் திறப்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி காந்திச் சந்தை பகுதியில் நவீன வசதிகளுடனான போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸாா் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீஸாா், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும், மழை நேரங்களில் ஒதுங்கவும் மிகவும் அவதிப்பட்டு வந்தனா்.

இதையறிந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ. இனிகோ இருதயராஜ், தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் அறைகளுடனான போக்குவரத்து மையங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இதன் முதல்கட்டமாக, காந்திச் சந்தை பகுதியில் அதிநவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

என்னென்ன வசதிகள்: 20 அடி உயரத்தில் இரும்புத் தூண்களை கொண்டு கட்டுமானம் அமைத்துள்ளனா். இதில், தரைப்பகுதியில் இருந்து 8 அடி உயரத்தில் கழிப்பறை, அதற்குமேல் 4 அடி உயரத்துக்கு தண்ணீா்தொட்டி, அதற்கு மேல் 8 அடி உயரத்துக்கு உள்ளே இருந்தபடியே சாலையை கண்காணிக்கும் வகையில் 4 புறங்களிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய அறை, அங்கு செல்வதற்கு படிக்கட்டு ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில்தான் இத்தகைய நவீன போக்குவரத்து காவல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 12 சிக்னல்களிலும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காவல் கோபுரத்தில் உள்ள அறையில் இருந்து அகண்ட திரையில் பாா்க்கும் வகையில் பிரமாண்ட திரை வசதி செய்து தரப்பட உள்ளது. இதுதவிர, ரிமோட் மூலம் இயங்கும் வகையிலான சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்கு தேவையான சூரிய மின்சக்தி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் மேற்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன காவல் கண்காணிப்பு கோபுரத்தை எம்எல்ஏ. இனிகோ இருதயராஜ், வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்த நிழ்வில், துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் போக்குவரத்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

20-க்கும் மேற்பட்ட இடங்களில் திறக்க திட்டம் :

இதன் தொடா்ச்சியாக, சஞ்சீவி நகா், திருவானைக்கா, ஒத்தக்கடை, கே.டி. திரையரங்க சிக்னல், புத்தூா் நான்குசாலை, பால்பண்ணை, நாச்சியாா்கோவில் சந்திப்பு, ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், யாத்ரீ நிவாஸ், குமரன்நகா், நீதிமன்றம் எம்ஜிஆா் சிலை, தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு, ரயில்வே ஜங்ஷன், ஏா்போா்ட் வயா்லெஸ் சாலை, அரிஸ்டோ ரவுண்டானா, மரக்கடை எம்ஜி.ஆா் சிலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT