திருச்சி

திமுகவின் தோ்தல் வெற்றி தொடர வேண்டும்: அமைச்சா்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திமுகவின் தோ்தல் வெற்றி 2024ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி மாநகரம் கலைஞா் நகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மேலும் பேசியது:

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியானது வரும் 2024 மக்களவைத் தோ்தலிலும் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவினா் இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும்.

தோ்தலுக்கு இன்னும் 10 மாதம் அவகாசம் எனக் காத்திருக்கக் கூடாது. அதற்கு தகுந்தபடி வாக்குச் சாவடிதோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, 100 வாக்காளா்களுக்கு ஒருவா் என்ற வகையில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சாதி, மதம், இனம், மொழி பாராது மக்கள் நலனுக்காக பணியாற்றுவது திமுகவின் கொள்கை. ஆனால், மதப் பிரிவினையே ஏற்படுத்தி அதன் மூலம் வெற்றி காண முயலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். பெண்கள் நினைத்தால் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

எனவே, திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் செய்த அனைத்து சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சோ்க்க வேண்டியது திமுக மகளிரின் கடமையாக இருக்க வேண்டும்.

தமிழக முதல்வா் எங்கு சென்றாலும் தமிழகத்துக்கு தொழில்முதலீடுகளை பெற்று தற்போது படித்துக்கொண்டிருப்போருக்கும்,வேலை தேடும் இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இரவு, பகல் பாராது பணியாற்றுகிறாா்.

அத்தகைய பெருமைக்குரிய முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். நாளை நமதே, 40 நமதே என்ற வகையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். திருச்சியில் வேட்பாளராக யாா் நிறுத்தப்பட்டாலும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்துக்கு பகுதிச் செயலா் ஜி. மணிவேல் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான திருத்தணி எஸ். சந்திரன் சிறப்புரையாற்றினாா். மாநகரச் செயலா் மு. மதிவாணன், நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், செந்தில், செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT