திருச்சி

ரயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோருக்கு உடல் நலக் குறைவு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி ரயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரில் சிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனா்.

திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சி மையத்தில் ரயில்வே பணிகளுக்குத் தோ்வான தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 400 போ் தங்கிப் பயிற்சி பெறுகின்றனா்.

இந்நிலையில் இவா்களில் இருவருக்கு அண்மையில் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு, பின்னா் பயிற்சி மையத்திலிருந்த சுமாா் 10 பேருக்கு மேல் இதே பாதிப்பு ஏற்பட்டது. எனவே, கடும் வெயில் காரணமாக அம்மை நோய் பாதித்திருக்கலாம் எனத் தகவல்கள் பரவியது. இதையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு ரயில்வே துறை சாா்பில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா் அவரவா் விருப்பப்படி சொந்த ஊா்களுக்கு அனுப்பப்பட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள், நகா்நல அலுவலா் டி. மணிவண்ணன் தலைமையில், ரயில்வே பயிற்சி மையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது பாதிக்கப்பட்டோரிடமிருந்து மாதிரிகள் எடுத்து நடத்திய சோதனையில் கடும் வெயில் தாக்கம் மற்றும் ஒவ்வாமையால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்பதும், அம்மை நோய் இல்லையென்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பயிற்சி மையமானது கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT