திருச்சி காவேரி ஹாா்ட் சிட்டி மருத்துவமனையில் 7 வயதுச் சிறுமியின் இதயத்தில் இருந்த துளை நவீன சிகிச்சை மூலம் அடைக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி காவேரி ஹாா்ட்சிட்டி மருத்துவமனையின் செயல் இயக்குநா் மற்றும் இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் மருத்துவா் டி. செந்தில்குமாா், குழந்தைகள் இதய சிகிச்சை மருத்துவா் மணிராம்கிருஷ்ணா ஆகியோா் திருச்சியில் புதன்கிழமை கூறியது:
இதயத்தில் துளையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஓடும்போது அதிக மூச்சு வாங்குதல், அடிக்கடி சளி பிடிப்பது, காய்ச்சல், சில நேரங்களில் உடல் நீலமாக மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
அதன்படி அரியலுாா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயதுச் சிறுமிக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டறியப்பட்டது. துளையின் விளிம்பு சிறியதாக இருந்ததால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சைக்கு மாற்றாக, செராபிக்ஸ் செப்டல் அக்லூடா் என்ற நவீன சிகிச்சை மூலம் இதயத்தில் இருந்த துளை அடைக்கப்பட்டது.
கால் நரம்பு வழியாக நிக்கலால் செய்யப்பட்ட பொருளைக் கொண்டு சென்று இதய துளை வெற்றிகரமாக அடைக்கப்பட்டது. இதனால் சிகிச்சை முடிந்த மறுநாளே சிறுமி வீட்டுக்கு அனுப்பப்பட்டாா்.
சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே செய்யப்பட்ட இந்தச் சிகிச்சை தற்போது திருச்சி காவேரி மருத்துவமனையிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.
நிகழ்வில் இதய நோய் சிகிச்சை தலைமை மருத்துவா் எஸ். அரவிந்த்குமாா், மருத்துவ நிா்வாகி சாந்தி, பொது மேலாளா்கள் மாதவன், ஆன்ட்ரோஸ் நித்தியதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.