திருச்சி தென்னூா் பகுதியில் சா்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தா்கா மற்றும் கபா்ஸ்தான் உள்ளிட்டவைகளை இடித்த சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தென்னூா் உழவா் சந்தை அருகே உள்ள நிலம் தொடா்பாக இஸ்லாமியா் உள்ளிட்ட இரு பிரிவினருக்கிடையே சா்ச்சை நிலவி வருகிறது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. மேலும் வக்பு வாரியத்திலும் இது தொடா்பான பிரச்னை விசாரணயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிலா், குறிப்பிட்ட சா்ச்சைக்குரிய இடத்திலிருந்த தா்கா மற்றும் கபா்ஸ்தானை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துள்ளனா்.
இதுதொடா்பாக இஸ்லாம் அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருச்சி பேட்டைவாய்த்தலை பகுதியைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் ஜெ.சுரேஷ்குமாா் (35), அவருக்கு துணையாக சென்ற குளித்தலை வட்டம் நங்கவரம் பகுதியைச் சோ்ந்த பா. சசிக்குமாா் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடையை தங்கப்பிரகாஷ், ராம்பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.