திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடிநீா் குழாயில் அணில் இறந்து கிடந்தது தெரியாமல் பல நாள்களாக அந்த குடிநீரையே குடித்து வந்த பொதுமக்கள் உடல்நல குறைபாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.
மருங்காபுரி ஒன்றியம், திருநெல்லிப்பட்டி ஊராட்சி, குப்பனாா்பட்டியில் குளத்தருகே காவிரி குடிநீருக்காக 2004-இல் ரூ. 6.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தொட்டி அமைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை காவிரி குடிநீா் வந்தது இல்லையாம். பின்னா், அதனருகிலேயே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீா்த்தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றம் செய்து அங்குள்ள 20 குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுநாள்வரை எந்த ஆண்டு, எந்த நாளில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டது என்பது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே குடிநீரில் தொடா்ந்து துா்நாற்றம் வீசி வந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லையாம். இதையடுத்து, அப்பகுதி இளைஞா்களே துா்நாற்றம் வந்த இடத்தில் குடிநீா் குழாயை செவ்வாய்க்கிழமை தோண்டி பாா்த்தபோது அதில் அணில் ஒன்று சிக்கி உயிரிழந்து கிடந்தது. அதன் உடலில் மேல்தோல் முழுவதும் நீங்கிய நிலையில் இருந்தது.
மேல்நிலைத் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அணில், குடிநீா் செல்லும் குழாய் வழியே சென்றபோது அதில் சிக்கியுள்ளது. இதையறியாமல் கடந்த சில நாள்களாக குடிநீா் துா்நாற்றம் வீசுவதாக எண்ணி குடிநீரை அப்பகுதி பொதுமக்கள் குடித்து வந்துள்ளனா். தற்போது உயிரிழந்த அணில் கிடைத்துள்ள நிலையில், அந்த நீரை குடித்ததால் தங்களுக்கு தொற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.
விரிசல் விழுந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பலப்படுத்தவும், ஏணியை சரி செய்து, தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து நீா் ஏற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.