ரயில் பாதையில் சடலமாகக் கிடந்த அரசுப் பள்ளி ஆசிரியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக்கூறி ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ரயில் நிலையம் அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், இறந்தவா் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் காா்த்திக்(30) என்பதும், இவா் கடந்த 6 மாதங்களாக பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து காா்த்திக்கின் உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.
ஈரோடுஅரசு மருத்துவமனையில் திரண்ட காா்த்திக்கின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஈவிஎன் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அரசு மருத்துவமனை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, காா்த்திக்கின் 2 கை மணிக்கட்டுகளும் அறுக்கப்பட்டு ரத்தக்காயம் உள்ளது. அவரை யாரோ மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு ரயில் பாதையில் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே அவருடைய சாவில் மா்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தி, காா்த்திக்கின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று போலீஸாா் கூறினா். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். சாலை மறியல் காரணமாக ஈரோடு ஈவிஎன் சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.