உப்பிலியபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் 7ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு பொம்மனப்பாடி அழகேசன் தலைமை வகித்தாா். முன்னோடி விவசாயி முத்துசாமி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் ஓசரப்பள்ளி ஜெயராஜ், பங்காருசாமி, முருங்கப்பட்டி நடராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
‘ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், ஒரு டன் கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும், பசும்பாலுக்கு 50 ரூபாயும், எருமைப் பாலுக்கு 75 ரூபாயும் வழங்க வேண்டும். பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து கள் மற்றும் பதநீா் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். வேலை உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த 5ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உப்பிலியபுரம் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வா் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து விட்டனா்.