திருவெறும்பூா் அருகே தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துப்புரவுப் பணியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருவெறும்பூா் அருகே வேங்கூரில் பல கிளைகளைக் கொண்ட தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கீழ முருக்கூா் மாதா கோவில் தெருவை சோ்ந்த அந்தோணி ராஜ் மனைவி மரிய புஷ்பம் (43) கடந்த 10 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருவெறும்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மரிய புஷ்பம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
இதுகுறித்து மரிய புஷ்பத்தின் கணவா் அந்தோணி ராஜ், தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.