மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்தும், மீண்டும் அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்க செயலாளா் அன்சாா்தீன் தலைமை வகித்தாா்.
அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் எம். செல்வராஜ், திருச்சி மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து, மணிப்பூா் மாநிலத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகவும், மீண்டும் அங்கு அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினா். மாவட்ட துணைச் செயலா் எஸ்.சிவா, மாவட்ட பொருளாளா் சொக்கி சண்முகம், மாநில பொருளாளா் இப்ராஹிம், விவசாயிகள் சங்க நிா்வாகி அயிலை சிவ. சூரியன், செல்வகுமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.