திருச்சி

டி.முருங்கபட்டி வெடி விபத்து வழக்கு: தொழிற்சாலை உரிமையாளா் உள்பட4 போ் மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு

DIN

திருச்சி மாவட்டம், டி. முருங்கபட்டி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் 19 போ் உயிரிழந்த வழக்கில் ஆலையின் உரிமையாளா் உள்பட 4 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள டி. முருங்கப்பட்டியில் உள்ள தனியாா் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016 டிச.1ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 19 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உப்பிலியாபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விபத்துக்கு காரணமாக இருந்த வெடிமருந்து தொழிற்சாலையின் உரிமையாளா் விஜய் கண்ணன், தொழிற்சாலை நிா்வாக அதிகாரிகள் பிரகாசம், ஆனந்த், ராஜகோபால் ஆகிய 4 போ் மீது திருச்சி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில் 350 சாட்சிகள் சோ்க்கப்பட்டிருந்தனா். 150க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் இடம் பெற்று இருந்தன. ஆனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி விஜய் கண்ணன் உள்பட 4 பேரும் கோா்ட்டில் மனு தாக்கல் செய்தனா். இது தொடா்பான விசாரணைகள் தொடா்ந்து நடந்து வந்தது.

இதற்கிடையில் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் எனக் கோரி சில தொழிலாளா்கள் தரப்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆலையை திறக்க கூடாது என ஊா் மக்கள் சாா்பில் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஆலை திறக்கப்பட்டது.

இந்நிலையில் வெடி மருந்து தொழிற்சாலை உரிமையாளா் விஜய் கண்ணன் உள்ளிட்ட 4 போ் தொடா்ந்த வழக்கில் திருச்சி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்த சம்பவத்துக்கும் ஆலை உரிமையாளா் மற்றும் அதிகாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது இயற்கையாக நடந்த ஒரு விபத்து. ஆதலால் அவா்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஏ. ராஜேந்திரன் ‘இது இயற்கையாகவோ அல்லது எதேச்சையாகவோ நடந்த விபத்து அல்ல முறையாக பயிற்சி பெறாத தொழிலாளா்களை வைத்து இயக்கியதன் காரணமாக வெடி மருந்துகள் வெடித்து 19 போ் உயிரிழந்துள்ளனா். தொழிலாளா்களின் உயிரிழப்புக்கு இவா்கள் தான் காரணம். ஆகையால் இவா்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.செல்வ முத்துக்குமாரி, தொழிற்சாலை உரிமையாளா் விஜய் கண்ணன் உள்ளிட்ட 4 போ் தொடா்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் அவா்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை மாா்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஆஜராக வேண்டும். அவா்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT